சென்னையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள 'பெரும்பேர் கண்டிகை' என்னும் தலமே 'பேறை நகர்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கத்திற்கு அடுத்த தொழுப்பேடு என்ற புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ளது. சிறிய மலைமீது இக்கோயில் அமைந்துள்ளது. மலைமீது செல்ல சுமார் 200படிகள் ஏறவேண்டும். தற்போது (2014) வாகனங்கள் மலைமீது செல்ல வசதியாக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
முருகப்பெருமான் மயிலின்மீது அமர்ந்து ஆறுமுகங்களுடன் காட்சித் தருகின்றார். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தலத்து முருகப்பெருமானை 'பீலிமயில் மீது உறையும்' என்று பாடியுள்ளார். முருகப்பெருமானின் இருபுறங்களிலும் வள்ளி, தெய்வநாயகி தேவியர் உள்ளனர். அகத்தியருக்கு முருகப்பெருமான் தெற்கு முகமாக காட்சியளித்த தலம். பாம்பன் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இத்தலத்து முருகனை வழிபட்டுள்ளனர். பாம்பன் இத்தலத்து மீது பாடல்கள் இயற்றியுள்ளார். குமரனின் குன்றுதோறாடலைப் பற்றிய அந்த பாடல் மிக அருமையாக உள்ளது. முருகன் சன்னதி எதிரில் அர்த்த மண்டபத்தில் பாம்பன் சுவாமிகள் திருவுருவம் அமைந்துள்ளது.
சித்திரைக் கார்த்திகையில் திருப்படிவிழா, வைகாசி மாதம் விசாகப் பெருவிழா மற்றும் கிருத்திகை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத கிருத்திகை அன்று 'ஓடத்திருவிழா' என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை முதல் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் எல்லாம் செய்து இரவு அலங்கரிக்கப்பட்ட 'ஓடத்தில்' உற்சவர் வலம் வருவார். அந்த விழாவில், சிறப்பு நாதஸ்வரம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.
இவ்வூருக்கு அருகில் உள்ள அச்சரப்பாக்கத்தில் தேவாரப் பாடல் பெற்ற ஆட்சீஸ்வரர் சிவன் கோயிலும், எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருங்கருணை என்னும் 'நடுபழநி'யில் பாலசுப்பிரமண்யசுவாமி திருக்கோயிலும் உள்ளது. இத்தலங்களை தரிசித்து முருகப்பெருமானின் பெருங்கருணையால், பெரும்பேறு கிடைக்கப் பிரார்த்திப்போம்!
|